முன்னர், கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களுக்கு வலி வரும்வரை காத்திருந்து மருத்துவர்கள் சுகப்பிரசவம் செய்தார்கள். இதனால் குழந்தையின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்தது.
சில தாய்மார்கள் பத்துக் குழந்தைகள்வரை சுகப்பிரசவத்தின்மூலமே பெற்றுள்ளார்கள். குனிந்து நிமிர்ந்து நன்றாக வேலை செய்தார்கள். சுகப்பிரசவத்தால் மருத்துவச் செலவு குறைவாக இருந்தது.
இன்று கர்ப்பம் தரிக்கும் பல தாய்மார்களுக்கு குழந்தை பிறக்க சிசேரியன் முறையைக் கையாளுகின்றனர். தாய்மார்களுக்கு இயற்கையாகவே வலி வருவதற்குமுன், மருத்துவர்கள் வலி வருவதற்கான ஊசி போட்டு பிரசவத்தைக் கையாளுகின்னர். இதற்கு நிறைய பணம் செலவாகிறது. தாய்மார்களுக்கு 45 வயதிற்குமேல் பல்வேறு உடல்நல பாதிப்பு உண்டாகிறது. இதனால் பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யமுடியாமல் போகிறது. முதல் குழந்தை சிசேரியன்மூலம் பிறந்தது என்றால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலம்தான் பிறக்குமா என்று தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்கள் பயப்படுகிறார்கள்.
சில மருத்துவர்கள் உண்மையிலேயே சுகப்பிரசவம்மூலம் பிறக்கும் நிலையைக்கூட சிசேரியன் நிலைக்கு ஆளாக்குகிறார்கள். இது தவறான செயலாகும். மருத்துவத் தொழில் என்பது புனிதமான தொழில்; சேவை செய்யும் தொழில். முற்பிறவியில் அதிகம் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்தப் பிறவியில் மருத்துவத் தொழில் அமையும். "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பது மருத்துவத் தொழிலுக்கே பொருந்தும். ஆனால் இன்று சில மருத்துவர்கள் பணம் அதிகம் சம்பாதிப்பதற்காக, அவசியமில்லாதவர்களுக்குக்கூட சிசேரியன் முறையைக் கையாளுகின்றனர். இது பாவச் செயலாகும்.
சுகப்பிரசவத்தால் பிறந்த குழந்தையின் ஜாதகம், கர்மா சரியாக அமையாத காரணத்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியாமல் போராடுகிறார்கள் என்றெண்ணி, நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டுமென்று ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெறுகிறார்கள். அவர்கள் குறித்துக்கொடுக்கும் நாள்- நேரத்தில் சிசேரியன்மூலம் பிரசவம் செய்யப்படுவதையும் நடைமுறையில் காணமுடிகிறது.
இவ்வாறு ஜோதிடர்கள் குறித்துக் கொடுக்கும் நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகம், விதி, கர்மா மாறுமா என்றால், அதற்குக்கூட ஆண்டவன் வழிவிடவேண்டும். ஆண்டவன் வழிவிட்டால் ஜோதிடர்கள் குறித்துக் கொடுக்கும் நேரப்படி சிசேரியன் பிரசவம் நடைபெறும். இல்லையென்றால் நடைபெறாது.
எனக்குத் தெரிந்த நண்பர் தன் மனைவியின் பிரசவத்திற்கு நல்ல நாள், நட்சத்திரம், கிரக நிலைகள், தசாபுக்தி நன்றாக அமையுமாறு குறித்துத் தரும்படி கூறினார். அதன்படி நான் ஒரே நாளில் இரண்டு நல்ல நேரம் குறித்துத் தந்தேன். இப்பொழுது முன்கூட்டியே இந்த நாளில் பிரசவம் செய்யலாம் என்று கண்டுபிடிப்பதற்கு வசதி வந்துவிட்டது. மருத்துவர்கள் அதற்கேற்றபடி அந்த நாளில் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
இரண்டு நல்ல நேரத்தில், முதலில் குறிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவர்களால் சிசேரியன் செய்ய முடியவில்லை. காரணம், இவரைவிட மற்றொரு நபர் முக்கியமென்று அங்கு சென்றுவிட்டார்கள்.
இரண்டாவது நல்ல நேரத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று குழந்தை பிறந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஜோதிடர்கள் நல்ல நேரம் குறித்துத் தந்தாலும், ஆண்டவன் விருப்பப்படி- அந்தக் குழந்தையின் விதியின்படி பிறந்துள்ளது. ஜோதிடர்கள் நேரம் குறித்துத் தந்தாலும், அந்தக் குழந்தையின் பிரசவ நேரத்தை- ஜாதகத்தை மாற்றமுடியாது.
ஒரு குழந்தை அறுவை சிகிச்சைமூலம்தான் பிறக்கவேண்டுமென்று பூர்வ புண்ணிய ராசிப்படி இருப்பின், அவ்விதம் அக்குழந்தை பிறக்கும் நேரத்தைதான் ஜோதிடரும் கணித்துக்கூறுகிறார்.
ஜோதிடரிடம் நேரம் குறிக்காமல் சிசேரியன் செய்தாலும், அது ஜோதிடர்கள் கணித்துக்கூறும் நாள் மற்றும் நேரத்தில்தான் குழந்தை பிறந்திருக்கும்.
ஒரு குழந்தை அறுவை சிகிச்சை மூலம்தான் பிறக்கவேண்டுமென்று ஜாதகத்தில் இருந்தால், அந்த தாயின் ஜாதகத்தில் 5-ஆம் இடம் என்று சொல்லப்படும் கர்ப்பஸ்தானம் அல்லது 9-ஆம் இடம் என்று சொல்லப்படும். புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சம்பந்தப்பட வேண்டும். இல்லையென்றால் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புண்டு. ஜோதிட விதிப்படி செவ்வாய் அறுவை சிகிச்சை (சர்ஜரி) மற்றும் ரத்தகாரகன் என்பது அனைவரும் அறிந்ததே.
ஜோதிடர்கள் சிசேரியன் செய்வதற்கு நல்ல நேரத்தைக் குறித்துத் தருவது சரியான செயலா என்று சிலர் கேட்கிறார்கள். ஒருவகையில் இது சரியான செயல்தான். ஏனென்றால் தற்காலத்தில் எத்தனையோ தொழில்நுட்பம் வந்துவிட்டது. அதேபோல் ஜோதிடர்கள் தற்காலத் தேவைக்கேற்ப நல்ல நேரத்தைக் குறித்துத்தருகிறார்கள்.
இன்று மட்டுமல்ல; அன்று மன்னர்கள் காலத்தில்கூட ராணிக்கு குழந்தை பிறப்பதற்கு அரசவையில் இருந்த ஜோதிடர்கள் நல்ல நேரத்தைக் குறித்து, "இந்த நேரத்தில் இந்த கிரகநிலைப்படி குழந்தை பிறந்தால் அவன் ராஜ்ஜியத்தை ஆளுவான். இல்லையென்றால் ராஜ்ஜியத்தை இழக்க நேரிடும்' என்று கூறியுள்ளார்கள்.
எனவே ஒரு குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தாலும், சிசேரியன்மூலம் பிறந்தாலும் அந்த குழந்தையின் விதி, ஜாதகம் மாறாது. ஆண்டவனைத் தவிர இதை யாராலும் மாற்றமுடியாது.
மகாபாரதத்தில் ஜோதிடரான சகாதேவன், துரியோதனன் போரில் வெற்றிபெற களபலி கொடுக்கவேண்டிய நாளைக் குறித்துத் தந்தான். ஆனால் பாண்டவர்களுக்கு சாதகமாகும்படி அதை மாற்றிவிட்டார் கிருஷ்ணர். தான் குறித்துத் தந்த நேரம் பொய்த்துப்போனதாய் வேதனையடைந்த சகாதேவன் தன்னிடமிருந்த ஜோதிட ஓலைச்சுவடிகளைத் தீயிலிட்டான் என புராணம் கூறுகிறது.
இந்த சம்பவத்தின்மூலம், ஜோதிடர்கள் அறுவை சிகிச்சைக்கு நல்ல நேரம் குறித்துத் தந்தாலும், ஆண்டவனின் முடிவுப்படியே இறுதியாக நடைபெறும் என்பதை உணரலாம்.
செல்: 98403 69513